27 ஆண்டு திருமண வாழ்விற்கு பின் விவாகரத்து முடிவை அறிவித்த பில் கேட்ஸ் தம்பதி

1 week ago

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா, 27 ஆண்டு திருமண வாழ்விற்குப் பின் விவாகரத்து முடிவை அறிவித்திருக்கிறார்கள்.

உலகின் செல்வந்த ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதி தங்களது விவாகரத்து முடிவை டுவிட்டரில் அறிவித்துள்ளனர். 65 வயதான பில்கேட்ஸ் உலகின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார்.

1987-ம் ஆண்டு பில் கேட்ஸ் மெலிண்டா கேட்ஸ்ஸை (56) சந்தித்தார். இவர்கள் இருவரும் 1994-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து பல தொண்டு சேவைகளுக்காக நிதியளித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் திருமண வாழ்விலிருந்து பிரிவதாகக் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து, பில் கேட்ஸ் தம்பதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -

கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான உதவிகளை செய்து வந்துள்ளோம். இந்தப் பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்துக் கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்தக் கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

இவ்வாறு அதில் கூறியுள்ளனர். 

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்