பட்ஜெட் தாக்கல் தொடர்பாக ராகுல் - நிர்மலா சீதாராமன் இடையே மோதல்
2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் குறித்து விமர்சித்த ராகுல் காந்திக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
நடப்பாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பின்னர் பட்ஜெட் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கொரோனாவால் பாதிப்பை சந்தித்த அனைத்து துறைகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுற்றுலா மற்றும் உணவு சேவை துறைகள் அதிக சிரமத்திற்கு ஆளானதால் அவசர கால கடனுதவி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் ஒரு ரூபாய் கூட வரி உயர்த்தப்படவில்லை. எல்.ஐ.சி பங்குகளை மதிப்பிடும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘ஜீரோ பட்ஜெட்’ என விமர்சித்த ராகுல்காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிலளித்தார். ட்விட்டரில் விரைவான விமர்சனம் செய்பவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன். பட்ஜெட் தொடர்பாக வெளியாகும் விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்கிறேன். சொந்த வேலையையே செய்ய தெரியாத இந்தியாவின் பழமையான அரசியல் கட்சியின் தலைவரின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.