2 தலை, 3 கைகளுடன் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் - வைரல் போட்டோ!
ஒரிசா மாநிலத்தில் பெண் ஒருவருக்கு இரண்டு தலைகள் மற்றும் மூன்று கைகளுடன் அபூர்வ இரட்டை பெண் குழந்தைகள் ஒட்டிப்பிறந்துள்ளது.
ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் உமாகண்ட் பரிடா. இவருடைய மனைவி அம்பிகா. கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அம்பிகாவுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தைக்கு இரண்டு தலைகள், இரண்டு கால்கள் மற்றும் மூன்று கைகளுடன் கூடிய இரட்டை பெண் குழந்தைகள் ஒன்றாக ஒட்டிப் பிறந்துள்ளது. சற்று வித்தியாசமாகப் பிறந்துள்ள இக்குழந்தையை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கேந்திரபாராவின் மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கேந்திரபாராவின் மாவட்ட தலைமையக மருத்துவமனையின் குழந்தை மருத்துவர் டெபாஷிஸ் சாஹூ பேசியதாவது -
ஒரே உடல், மூன்று கைகள் மற்றும் இரண்டு கால்களைப் பகிர்ந்து கொள்ளும் இரட்டை சகோதரிகளான இந்த குழந்தை, இரண்டு வாயால் சாப்பிட்டு, இரண்டு மூக்குகளால் சுவாசிக்கின்றன. மேலும் குழந்தையின் உடல் ஆரோக்கியமாக உள்ளது. ஆனால் நாங்கள் குழந்தையை சிறப்பு சிகிச்சைக்காக கட்டாக்கின் சர்தார் வல்லபாய் பட்டேல் முதுகலை பட்டதாரி இன்ஸ்டிடியூட் ஆப் பீடியாட்ரிக்ஸ் (சிஷு பவன்)-க்கு மாற்றியுள்ளோம் என்றார்.
இந்நிலையில் அக்குழந்தையின் தந்தை உமாகண்ட் பரிடா செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை உணவைக்கூட உண்ணமுடியாத வறுமையில் உள்ளோம். இந்நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தையின் சிகிச்சைக்கு எங்களிடம் போதிய பணவசதி கிடையாது. எனவே எங்கள் குழந்தையின் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.