தாலிபான்களுக்கு டஃப் கொடுக்கும் பெண்கள் - உரிமைகோரி போராட்டம்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் சில சம உரிமைக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில் அங்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை நிர்வகித்து வருகின்றனர். அவர்களது ஆட்சியில் உயிர்வாழ பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
தாலிபான் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பெண்கள் சுகாதாரத்துறையிலும், பிற துறைகளிலும் வேலை செய்யலாம் என்றும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிதாக உருவாகவுள்ள ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டும் எனக் கோரி அந்நாட்டு பெண்கள் சிலர் காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு முழு உரிமைகள் வழங்கப்பட வேண்டும், மனித உரிமைகளை நிலைநாட்ட வேண்டும், பழமைவாதமும் மத அடிப்படை வாதத்திற்கும் திரும்ப முடியாது என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய நிலையில் கையில் ஆயுதம் ஏந்திய தாலிபான்கள் அங்கு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.