போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தவர்களை கண்டித்த போக்குவரத்து பெண் காவலர் மீது தாக்குதல் - 6 பேர் கைது
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தவர்களை கண்டித்த போக்குவரத்து பெண் காவலர் மீது சிலர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த பெருமாள் என்பவரது மனைவி முனியம்மாள் இவர் நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்கள் நடராஜபுரம் தெருவில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
அப்போது கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் அருகே மெயின் ரோட்டில் உடலை கொண்டு சென்ற போது, அப்போது சில இளைஞர்கள் போக்குவரத்து இடையூறாக ஆடிக் கொண்டு வந்ததாக தெரிகிறது,
அப்போது அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ஜான்சி ராணி என்பவர் அந்த இளைஞர்களை பார்த்து போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல் உடலைக் கொண்டு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் அந்த இளைஞர்கள் போக்குவரத்து காவலர் பேச்சைக் கேட்காமல் , அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர் பின்னர் கைகலப்பாக மாறி உள்ளது. இது குறித்து போக்குவரத்து பெண் காவலர் ஜான்சிராணி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் காவலரை அவதூறாக பேசி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக லெனின் நகரைச் சேர்ந்த ராசு(30), அண்ணா நகரைச் சேர்ந்த மாடசாமி(56), அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி(27), மதன்ராஜ்(28), சந்தனகுமார்(26) மற்றும் சுரேஷ்குமார்(29) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
தற்போது பெண் போக்குவரத்து காவலரை இளைஞர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.