பட்டியலின ஊராட்சி பெண் தலைவர் காணவில்லை...கணவர் பரபரப்பு புகார்..!
தனது மனைவியான நாயக்கனேரி மலை கிராம ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி காணவில்லை என அவரது கணவர் பாண்டியன் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
இந்துமதி பாண்டியன்
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நாயக்கனேரி மலை கிராம ஊராட்சி மன்ற தலைவர் இந்துமதி பாண்டியன். நடந்து முடித்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் இந்துமதி வெற்றி பெற்ற நிலையிலும், எதிர்ப்புகள் காரணமாக தலைவருக்கான பதவியை ஏற்கமுடியாமலும், கிராமத்திற்குள்ளும் செல்ல முடியாமல் கிராமத்திற்கு வெளியே இந்துமதி பாண்டியன் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், கடந்த இந்துமதி கடந்த 9-ஆம் தேதி மாலையில் இருந்து காணவில்லை என்று அவரது கணவர் பாண்டியன் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அச்சுறுத்தல் உள்ளது
அவர் அளித்துள்ள புகாரில், நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் இருந்து தொடர்ந்து தங்களுக்கு அச்சுறுத்தல் இருந்து வந்ததாகவும், அதனால் தாங்கள் கிராமத்திற்குள் செல்ல முடியாது நிலை இருந்ததாக பாண்டியன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 2021-ஆம் ஆண்டு நடந்த ஊரக ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற நிலையிலும், மாற்று சாதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் இந்துமதி பதவி ஏற்க முடியாத சூழலில் இருக்கின்றது. பாண்டியன் அளித்த புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை துவங்கியுள்ளனர்.