மகளின் திருமண சேமிப்பை கொண்டு கொரோனா காலத்தில் பசியாற்றும் பெண்...
நெல்லையை சேர்ந்த ஊர்க்காவல் படை பெண் காவலர் கொரோனா காலத்தில் ஏழை மக்களின் பசியாற்றும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா 2வது அலையின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் சாலையில் ஆதரவற்று கிடக்கும் மக்களுக்கு உணவு அளிக்கும் வகையில் ஆங்காங்கே சில நல்ல தன்னார்வ அமைப்புகள், இளைஞர் குழுக்கள் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நெல்லை சந்திப்பில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் தன் கணவர், ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து, மாதம் ரூபாய் 2500 வருமானத்துடன் பணியாற்றி வரும் நெல்லை மாநகர ஊர்க்காவல் படை பெண் காவலர் சியாமளாதேவி நாள்தோறும் தன்னால் இயன்ற அளவு 50 பேர்களுக்கு வீட்டிலேயே உணவு சமைத்து அதனைப் பார்சலாக செய்து சாலைகளில் பசியோடு இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகிறார்.
இதற்காக தன்னுடைய மூத்த மகளின் கல்யாணத்துக்காக சேமித்த பணத்தை, குடும்பத்தினர் ஒப்புதலுடன் செலவழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.