அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு விற்கப்படுகின்றார்களா ? வெளியான அதிர்ச்சி தகவல்
வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்திய இளம்பெண்கள், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு விற்கப்படுவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அனுப்பி வருகிறது.
இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காக பெண்கள் உள்பட ஏராளமானோர் அனுப்பப்பட்டு வருகின்றனர். அதன்படி வளைகுடா நாடுகளில் செல்வந்தர்களின் வீடுகளில் குழந்தைகளை பராமரிக்க இளம்பெண்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டது.
இந்திய பெண்கள் விற்பனை
சம்பளமாக மாதம் ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த விளம்பரத்தை பார்த்து ஏராளமான இளம்பெண்கள் வேலைக்கு விண்ணப்பித்தனர். கேரளா மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த பெண்களும் ஆர்வத்துடன் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பித்தவர்களில் தங்களுக்கு தேவையான தகுதியான பெண்களை தேர்வு செய்து அந்த தனியார் நிறுவனத்தினர் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வேலைக்கு சென்ற இளம்பெண்களை, அங்குள்ள செல்வந்தர் வீடுகளில் அடிமை வேலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக கொச்சியில் உள்ள நிறுவனத்தினர் ஒவ்வொருவரையும் ரூ.9½ லட்சத்திற்கு அடிமை வேலைக்காக அங்குள்ள செல்வந்தர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை அங்கிருந்த பெண்கள், தங்களுடைய உறவினர்களுக்கு வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து துபாய், குவைத், பகரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்திய அமைப்புகள் மூலம் 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டு மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தநிலையில் கேரளாவுக்கு திரும்பிய கொச்சியை சேர்ந்த ஒரு இளம்பெண் கடந்த மாதம் கொச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த புகாரினை அடிப்படையாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த மஜீத் என்பவர் இந்த மோசடி விவகாரத்தில் தலைவனாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.
ஐஎஸ் ஐ தீவிரவாதிகளுக்கு விற்கபடும் இந்தியப் பெண்கள்
இதற்கிடையே இந்த விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறைக்கு செல்லுகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வளைகுடா நாடுகளுக்கு அடிமை வேலைக்கு விற்கப்படும் பெண்களில் சிலரை சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அடிமைகளாக விற்கபட்டிருப்பது தெரிய வந்துள்ளது .
அதாவது அடிமை வேலைக்கு மறுக்கும் பெண்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர். அந்த இளம்பெண்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதன் மூலம் சிக்கியுள்ள இந்தியப் பெண்கள் தற்போது எங்கு உள்ளனர் என்ற தகவல் தற்போது தெளிவாக தெரியவில்லை , இது குறித்து புலனாய்வு துறையினர் தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.