பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் : போலீசார் விசாரனை
மதுராந்தகம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் இருந்த பெண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம், இந்தலூர் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன்-வைத்தீஸ்வரி தம்பதிக்கு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது.
இவர்களுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் தம்பதி, தங்களது வீட்டின் மேல் மாடியில் கொட்டகை அமைத்து வசித்து வந்தனர்.
கீழ் வீட்டில் சிலம்பரசனின் பெற்றோர் வசித்து வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு சிலம்பரசன் வெளியூர் சென்றதாக கூறப்படும் நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர்.
அங்கு வைத்தீஸ்வரியின் உடல் அழுகிய நிலையில் இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவரது சடலம் அருகில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்து பாட்டில் இருந்ததால் அவர் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அச்சிறுப்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வைத்தீஸ்வரி தனக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டாரா இல்லை வேறு ஏதேனும் பிரச்சினையா என போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.