தேசிய பாதுகாப்பு அகாடமியில் இனி பெண்களுக்கும் இடமுண்டு - மத்திய அரசு தகவல்
இந்திய ராணுவத்தின் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இனி பெண்களும் சேர்க்கப்படுவார்கள் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குஷ் கல்ரா மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை நீதிபதிகள் எஸ்.கே. கெளல், சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்றம் அமர்வு இன்று விசாரித்தது.
அப்போது இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தது.
மேலும் இந்தாண்டு நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிப்பது கடினமான ஒன்று என்றும், பெண்களை சேர்ப்பது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்க தங்களுக்கு சிலகாலம் தேவைப்படுவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.