கோவை: பிரதமர் மோடிக்கு தினமும் கடிதம் எழுதும் நிறைமாத கர்ப்பிணி; இதுவரை 264 - எதற்காக..?
நாட்டு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு, கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் கடிதம் எழுதி வருகிறார்.
பிரதமருக்கு கடிதம்
கோவை மாவட்டம் காந்தி மாநகரைச் சேர்ந்தவர் கிருத்திகா. இவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மகளிர் தினம் அன்று, பிரதமர் மோடிக்கு தனது முதல் கடிதத்தை எழுதியுள்ளார் கிருத்திகா.
அந்த கடிதத்தில், சமையல் எரிவாயு விலை அதிகமாக உள்ளது. அதனை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குதல் கோரி 2வது மனு எழுதியிருந்தார்.
இதேபோல் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்தல், நிர்பயா அமைப்பு நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாட்டிற்கு அதிகமாகதருவது, பி.எஸ்.என்.எல் 5 ஜி சேவை நிறுவுவது, தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்துவது தொடங்கி, தற்போது நடந்த இஸ்ரேல்-காசா போர் வரை பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பி வைத்துள்ளார் கிருத்திகா. இதுவரை 263 கோரிக்கை மனுக்களை எழுதி அனுப்பியுள்ள கிருத்திகா சட்ட நாளான நேற்று தனது 264வது கடிதத்தை எழுதினார்.
மன நிறைவு
அக்கடிதத்தில், இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படையில் கடமைகள் தெரியப்படுத்தி, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை மனுவை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ளார்.
இவரின் இந்த கடிதங்களுக்கு பிரதமர் மோடி அலுவலகத்திலிருந்து அக்னாலேஜ்மண்டு தருகின்றனர். மேலும், தினமும் காலை 10 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து போனில் அழைத்து, மனு குறித்து விவாதிக்கின்றனர். இது தொடர்பாக கிருத்திகா கூறியதாவது "என் கணவர் உள்பட குடும்பத்தார் அனைவரும் எனக்கு இதற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.
அரசியல் கட்சிகள் தெரிவிக்கும் அதே கோரிக்கையை நான் தெரிவித்தாலும், அக்கோரிக்கையானது நிறைவேறும் போது, அதில் எனக்கும் ஒரு பங்கு இருப்பதாக நினைத்து மன நிறைவடைகிறேன். பெரியார், அம்பேத்கர், மார்கஸ் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களை படித்து அறிந்து இருப்பதால், பொதுமக்களின் நலன் சார்ந்து நாள்தோறும் இந்த கடித போக்குவரத்து பணியை தொடர இருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.