நெஞ்சுவலி என மருத்துவமனையில் சேர்ந்த பாட்டி - முட்டியில் ஆபரேஷன் செய்த டாக்டர்
நெஞ்சு வலி என மருத்துவமனையில் சேர்ந்த பாட்டிக்கு கால் முட்டியில் டாக்டர் ஆபரேஷன் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பான்வாரி தேவி என்ற 70 வயது பாட்டி நீண்ட நாட்களாக சளி மற்றும் நெஞ்சு வலித்தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனிடையே கடந்த 18 ஆம் தேதி இவர் இருக்கும் பகுதியில் ஜெய்ப்பூ் ராஜாட் மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடந்தது.
இதை பார்த்த பான்வாரிதேவி தன் சளிதொல்லைக்கு மருந்து வாங்க அந்த முகாமிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் பிரச்சனை சரியாகும். ஆபரேஷனிற்காக பணம் எதுவும் கட்ட தேவையில்லை என கூறியுள்ளனர். இதை நம்பிய பன்வாரிதேவியும் சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார்.
பின்னர் பன்வாரிதேவியிடம் சில இன்சூரன்ஸ் பேப்பர்களில் கையெழுத்து வாங்கப்பட்டு அரசின் சிரஞ்சீவி இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் டாக்டர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து அவரது கால் முட்டியில் ஆபரேஷன் செய்துள்ளனர். சளித்தொல்லை, நெஞ்சு வலிக்கு ஏன் கால் முட்டியில் ஆபரேஷன் செய்கிறீர்கள் என பன்வாரி கேட்ட போதும் மருத்துவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு அறுவைசிகிச்சையை முடித்து மருத்துவமனை நிர்வாகம் பணத்தையும் பெற்ற நிலையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து ராஜஸ்தான் அரசு இந்த மருத்துவமனை நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட 3 டாக்டர்களையும் உடனடியாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.