ஈஷா யோகா மைய பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு
திருப்பூரை சேர்ந்த மாணவி சுப ஸ்ரீ. இவர் கடந்த டிசம்பர் மாதம் 11ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 18ம் தேதி பயிற்சிக்கு வந்த சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் செம்மேடு பகுதியில் ஓடிச்செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது.
இந்த நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கிட்டத்தட்ட 6 தனிப்படைகள் அமைத்து, 100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த பெண் எப்படி மாயமானார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், கிட்டத்தட்ட இரண்டு வாரம் கழித்துள்ள நிலையில், அதே செம்மேடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது தோட்டத்திற்கு சொந்தமான கிணற்றில் இருந்து ஒரு பெண் சடலம் கிடப்பதாகவும், துர்நாற்றம் வீசி வருவதாகவும் தகவல் கிடைத்தது.
அந்த தகவலை தொடர்ந்து தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது கிணற்றில் இறந்து கிடந்தது சுபஸ்ரீ என்பது தெரியவந்துள்ளது.
அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் மீட்கப்பட்டது. இதன் பிண்ணனி என்ன என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது