2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை - கன்னியாகுமரியில் நடந்த சோக சம்பவம்

suicide kanyakumari கன்னியாகுமரி குழந்தைகளுடன் தாய் தற்கொலை
By Petchi Avudaiappan Feb 02, 2022 04:25 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

கன்னியாகுமரியில் இரண்டு குழந்தைகளையும் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்த விஜி என்ற பட்டதாரி பெண் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சுற்றுலா தலமான வர்க்கலையில் உள்ள ரிசார்ட்டில் வேலை பார்த்து வரும் ஜெபர்ஷைன் என்பவரை திருமணம் செய்துள்ளார். 

இவர் மாதத்திற்கு ஒருமுறை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம் என்பதால் விஜி தனது தாயார் மற்றும் மாமியாருடன் 2 வயது மற்றும் 6 மாத இரண்டு பெண் குழந்தைகளுடன் குழித்துறையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே நேற்று மதியம் விஜி தனது தாயாரை அருகில் உள்ள தேவாலயத்துக்கு சென்று வருமாறு கூறி அனுப்பியுள்ளார். அதன்பின் தனது மாமியாரையும் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருமாறு சொல்ல அவரும் சென்றுள்ளார். இதனையடுத்து அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு சென்றதும் விஜி தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் நிரப்பி வைத்திருந்த தண்ணீரில் மூழ்க வைத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவர்கள் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு  வீட்டினுள் சென்று அறையினுள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிறிது நேரத்தில் தேவாலயத்துக்கு சென்ற தாயார் திரும்பி வந்து பார்த்த போது இரண்டு குழந்தைகளும் தண்ணீர் தொட்டிக்குள் இறந்த நிலையில் கிடந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார் வீட்டினுள் சென்று பார்த்த போது மகள் விஜியும் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்துள்ளார்.

இதனைக்கண்டு கதறி அழுத தாயார் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். உடனடியாக நடந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மார்த்தாண்டம் போலீசார் மற்றும் தக்கலை டிஎஸ்பி கணேசன் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டு 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குழித்துறை பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.