மாட்டிறைச்சியுடன் பயணித்த மூதாட்டி; பாதியிலே இறக்கிவிட்ட அவலம் - ஒட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட்!
மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாட்டிறைச்சி விவகாரம்
தருமபுரி, அரூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்றில் பாஞ்சாலை என்ற பெண் பயணம் செய்துள்ளார். நவலை கிராமத்தைச் சேர்ந்த 59 வயது மூதாட்டி ஆன இவர்,
கணவர் இறந்ததற்கு பிறகு 30 ஆண்டு காலமாக அரூரில் மாட்டிறைச்சி வாங்கி "சுக்கா" சமைத்து விற்பனை செய்து வாழ்கையை நடத்தி வருகிறார். எப்போதும் போல் மாட்டிறைச்சி வாங்கி கொண்டு பேருந்தில் ஏறியுள்ளார். இதையறிந்த நடத்துநர் மூதாட்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு பேருந்தை மோப்பிரிபட்டி வனப்பகுதியில் நிறுத்தி அவரை இறக்கிவிட்டுள்ளனர்.
பணியிடை நீக்கம்
அடுத்த பேருந்து நிறுத்ததில் இறக்குமாறு கெஞ்சி கேட்டும் நடத்துநரும், ஓட்டுநரும் நடுவழியிலேயே அவரை இறக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த மூதாட்டி நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி சென்றுள்ளார்.
வீட்டிற்குச் சென்ற அவர், உறவினர்களிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த வழியாக திரும்பி வந்த பேருந்தை வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர்.
பிறகு இச்சம்பவத்தை குறித்து போக்குவரத்து துறையினரிடம் புகாரளிக்கப்பட்தை அடுத்து, பேருந்து நடத்துநர் ரகு , ஓட்டுநர் சசிகுமார் ஆகிய இருவரும் மறு உத்தரவு வரும் வரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.