லிஃப்ட் கொடுப்பதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர்கள்
ராஜஸ்தானில் திருமணமான பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தின் பஸ்ஸி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட கிணற்றில் திங்கட்கிழமை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் 35 வயதான அந்த பெண் 24 ஆம் தேதி தௌசாவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு செல்ல ஜெய்ப்பூரில் இருந்து பேருந்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.
நீண்ட நேர பயணத்துக்கு பிறகு தௌசாவில் உள்ள தனது கிராமத்திற்கு பேருந்தில் வந்த அவர், தனது பெற்றோரின் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர் தங்கள் வாகனத்தில் லிப்ட் கொடுப்பதாக கூறியுள்ளனர். முதலில் ஏற மறுத்த நிலையில், அப்பெண்ணிடம் நாங்கள் உங்கள் உறவினர்கள் தான் எனக் கூறி கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால் கிராமத்திற்கு அழைத்துச் செல்லாமல் அருகிலிருந்த காட்டுப் பகுதிக்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று சுமார் 3 மணி நேரமாக மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமைக்குப் பின் அவர்கள் அந்தப் பெண்ணைக் கொன்று அவரது உடலை கிணற்றில் வீசினர் என தெளசா மாவட்ட போலீசார் கூறியுள்ளனர்.
இதனிடையே கொலை செய்யப்பட்ட பெண் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோர் 24 ஆம் தேதி மாலை தௌசாவின் ராம்கர் பச்சவாரா காவல் நிலையத்தில் தங்கள் மகளை காணவில்லை என்று புகார் அளித்தனர். இந்நிலையில் தான் அங்கிருந்த கிணற்றில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததையடுத்து , 25 ஆம் தேதி அதிகாலையில் உடல் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.