கோமாவில் இருந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை - மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டு
இங்கிலாந்தில் கொரோனா வைரஸால் கோமாவில் இருந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக மனிதர்களை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ள கொரோனா வைரஸ் கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தையையும் சேர்த்து பாதிக்கக்கூடியதாக இருந்தது. இப்படியொரு மோசமான நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
பிரைமரி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த லாராவுக்கு கடந்த கோடை விடுமுறையில் லேசான சளி பாதிப்பு ஏற்பட்டு பிசிஆர் பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் மருத்துவர்கள் லாராவை மருத்துவமனையில் அனுமதிப்பது தான் சரி என்று அறிவுரை கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கான ஏற்பாடுகள் செய்வதற்குள் லாராவுக்கு மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கர்ப்பமாக இருந்ததால் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத நிலையில் கோமா நிலைக்கு லாரா சென்றுவிட்டார்.
இதை அறிந்த மருத்தவர்கள் உடனடியாக குழந்தையை அறுவை சிகிச்சையின் மூலம் வெளியில் எடுத்தாக வேண்டும் என்று முடிவு செய்தனர். ராயல் போல்டான் மருத்துவமனையில் லாராவுக்கு வெற்றிகரமாக பிரசவம் நடைபெற்று பெண் குழந்தை பிறந்தது. சுமார் 7 வாரங்களுக்குப் பின் லாராவுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி நினைவு திரும்பியது.
அவர் முதன்முதலில் கண் விழித்து பார்த்தது அவரின் பெண் குழந்தையை தான் பல நாட்களாக கோமாவில் இருந்ததால் லாரா தனது உடலை அசைக்க முடியாத நிலையில் இருந்தது. மேலும் நம்பிக்கையற்ற சூழலில் மிகப்பெரிய நம்பிக்கையாக இந்த பெண் குழந்தை பிறந்துள்ளதால் இதற்கு 'ஹோப்' (Hope) என்று பெயர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.