காவிரி ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண்... காப்பாற்றிய மீனவர், இளைஞர்
நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த ராதா என்பவர் விசைத்தறி கூலித் தொழிலாளியாக உள்ளார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து ராதா நேற்றூ ஈரோடு செல்லும் சாலையில் உள்ள காவிரி ஆற்றின் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதைப்பார்த்து ஆற்றின் நடுவே பரிசலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் அதிர்ச்சியடைந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ராதாவை பரிசலில் ஏற்ற முயற்சி செய்துள்ளார்.
அதேசமயம் ஆற்றில் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் குதித்து தற்கொலைக்கு முயன்ற ராதாவை பரிசலில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பள்ளிபாளையம் போலீசார் ராதாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காவிரி ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவர்கள் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதனை தடுக்க விழிப்புணர்வு பேனர்கள் வைத்து காவல்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.