பஸ் டிரைவரின் சட்டையை பிடித்து சரமாரியாக அடித்த பெண் - அதிர்ச்சியடைந்த பயணிகள்
ஆந்திராவில் பஸ் டிரைவரின் சட்டையை பிடித்து சரமாரியாக பெண் ஒருவர் அடித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருபவர் முசலைய்யா என்பவர் நேற்று விஜயவாடா ஆந்திரா மருத்துவமனை சாலையில் பேருந்தினை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சாலை ஒருவழிப்பாதை என கூறப்பட்ட நிலையில் அதில் பெண் ஒருவர் போக்குவரத்து விதியை மீறி இருசக்கர வாகனத்தில் வந்ததாக கூறப்படுகிறது.
அதன்மீது முசலைய்யா ஓட்டி வந்த பஸ் இலேசாக மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேருந்தை வழிமறித்துள்ளார். மேலும் முசலைய்யாவை சரமாரியாக வார்த்தைகளால் விளாசிய அப்பெண் தொடர்ந்து பேருந்துக்குள் ஏறிச் சென்று சட்டையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளார்.
ரகளையில் ஈடுபட்ட பெண்ணை பேருந்தில் இருந்த சகபயணிகள் சமாதானம் சொல்லி கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து அப்பெண் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அப்பெண்ணை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண் விஜயவாடா வித்யாரண்யர் புரத்தை சேர்ந்த நந்தினி என்பதும், இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.