கிப்ட் வாங்குவது போல் நடித்து பேன்ஸி கடையில் நகையை பறித்த பெண் - வைரலாகும் வீடியோ
கோவையில் காதலர் தினத்திற்கு கிப்ட் வாங்குவது போல் நடித்து பேன்ஸி கடையில் புகுந்து பெண் ஒருவர் நகை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி ஏழாவது வீதியில் செல்வராணி என்பவர் சண்முகா பேன்ஸி என்ற கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று முன்தினம் பிற்பகல் வந்த பெண் ஒருவர் கடையில் காதலர் தினத்திற்கு வழங்க கிப்ட் பொருட்கள் வேண்டும் என கூறி சில பொருட்களை வாங்கியுள்ளார்.
அப்போது பொருட்களை கடை உரிமையாளர் செல்வராணி எடுத்து பேக்கிங் செய்து கொண்டு இருந்த போது அப்பெண் தனது பையில் மறைத்து வைத்திருந்த Hit ஸ்ப்ரேவை எடுத்து செல்வராணி முகத்தில் அடித்துள்ளார். அதில் மயக்கமடையாத செல்வராணி கூச்சலிட அவரது கழுத்தில் கிடந்த 7.5 சவரன் நகையை பறித்து விட்டு அந்த பெண் தப்பியோடினார்.
செல்வராணி விடாமல் துரத்தி செல்ல பொதுமக்கள் உதவியுடன் அப்பெண்ணை பிடித்து ரத்தினபுரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அப்பெண் மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தெய்வந்தி என்கிற தமிழ்மணி என்பதும், சிறிது நாட்களாக அதே பகுதியில் இந்த பெண் தங்கி இருப்பதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கடைக்குள் நடந்த நகை பறிப்பு முயற்சி சம்பவம் அடங்கிய சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
கோவை ரத்தினபுரி பேன்ஸி கடையில் காதலர் தினத்திற்கு கிப்ட் வாங்குவது போல் நடித்து, வயதான பெண்ணின் முகத்தில் HIT ஸ்பிரே அடித்து நகையை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இறுதி வரை போராடிய வயதான பெண் பொதுமக்கள் உதவியுடன் திருடியை பிடித்தார். @News18TamilNadu pic.twitter.com/PlF0MMNSuD
— Gurusamy (@gurusamymathi) February 12, 2022