வீட்டை வாடகைக்கு எடுத்து உரிமையாளர் வீட்டில் திருடிய பெண் - பொதுமக்கள் அதிர்ச்சி

By Petchi Avudaiappan Apr 28, 2022 07:46 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

புதுச்சேரியில் வீட்டை வாடகை எடுத்து வீட்டின் உரிமையாளர் வீட்டில் 16 சவரன் தங்க நகைகளை திருடிய தமிழகத்தை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டனர்.  

புதுச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுப்ரமணி என்பவர் ரங்கபிள்ளை வீதியில் பங்க் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் தங்களது வீட்டில் கடந்த 22 ஆம் தேதி 16.5 சவரன் தங்க நகை திருட்டு போய் விட்டதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது சுப்ரமணியின் வீட்டில் கடந்த மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சைக்காக மாடியில் குடியிருந்த திண்டிவனத்தை சேர்ந்த வளர்மதி என்கிற பெண் ஒரு மாத காலம் தங்கி இருந்தது தெரியவந்தது.  

சந்தேகத்தின் பேரில்  காலாபட்டில் நண்பர் வீட்டில் தங்கி இருந்த வளர்மதியை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது வளர்மதி ஒரு மாத காலம் சுப்ரமணி வீட்டில் தங்கிய போது கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுவதும் சுப்ரமணியின் தாயார் வீட்டை திறந்து வைத்து விட்டு அக்கம் பக்கத்தில் பேசி கொண்டு இருப்பதையும் அறிந்துள்ளார்.

பின்னர் வாடகை இருந்த வீட்டை காலி செய்து விட்டு சென்ற வளர்மதி கடந்த 21 ஆம் தேதி இரவு 7 மணியளவில் சுப்ரமணி வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 16.5 சவரன் தங்க நகைகளை திருடி சென்றதாக ஒப்பு கொண்டார்.  இதனை தொடர்ந்து அவர் திருடி சென்ற நகைகளை மீட்ட போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர். 

அதேசமயம் வாடகைக்கு வருபவர்களின் விபரங்களை முழுமையாக சேகரிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.