அதிகாலை பேருந்துக்குள் பெண்ணுக்கு நடந்த கொடூரம் - போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே என்ன நடந்தது?
பேருந்துக்குள் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மகாராஷ்டிரா, புனேயில் உள்ள ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில், அதிகாலை நேரத்தில் இளம்பெண் ஒருவர், பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் எங்கே செல்ல காத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு, அந்த பெண் பல்தான் கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உடனே அந்த பேருந்தை காட்டுவதாக மின்விளக்கு வெளிச்சம் இல்லாத இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், உள்ளே அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பதால் லைட் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
வெடித்த போராட்டம்
இதனை நம்பி ஆள் நடமாட்டமே இல்லாத பேருந்திற்குள் அந்தப் பெண் ஏறியுள்ளார். பின், அந்த நபர், திடீரென பேருந்தின் கதவை அடைத்துள்ளார். தொடர்ந்து, பேருந்துக்குள் வைத்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து போலீஸில் புகாரளித்ததில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பாலியல் வன்கொடுமை செய்தவர், தத்தாத்ரேய ராம்தாஸ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்துள்ளது. இந்நிலையில், அந்த பேருந்து நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தான் காவல் நிலையம் உள்ளது.
இதனால் இந்த சம்பவத்தை கண்டித்து உத்தவ் தாக்கரே தரப்பு, சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஸ்வர்கேட் பேருந்து நிலைய அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளனர். தற்போது அவரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.