வேலை தருவதாக அழைத்து... பெண் ஊழியர் பரபரப்பு பாலியல் புகார் - பதிலளித்த ஆளுநர்!
மேற்கு வங்கஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் புகார்
ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சி.வி. ஆனந்த போஸ், கடந்த 2022ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக பதவியேற்றார். இந்த நிலையில், மேற்கு வங்க ஆளுநர் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக,
கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக ஊழியரான பெண் ஒருவர் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த பணியாளர், ஆளுநர் மாளிகையின் உள்ளே அமைந்துள்ள காவல் நிலையத்திற்குச் சென்று ஆளுநர் ஆனந்த போஸ் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த ஒரு காவல் அதிகாரி உடனே இந்த சம்பவம் தொடர்பான விஷயத்தை விசாரித்துள்ளார்.
ஆளுநர் பதில்
உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு சென்ற போலீஸார், அந்தப் பெண்ணை பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். ஆளுநர் ஆனந்த போஸ் தனக்கு நிரந்தர வேலை வழங்குவதாகக் கூறி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக எழுத்துப்பூர்வமாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.
இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆதாயத்திற்காக வீண்பழி செலுத்தும் நோக்கில் கட்டமைக்கப்பட்ட இதுபோன்ற கதைகளுக்கு.ப் பயப்பட மாட்டேன், மேற்கு வங்கத்தில் ஊழல் மற்றும் வன்முறைக்கு எதிரான தனது போராட்டத்தை ஒருபோதும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.