ஓடோடி வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்த பெண் - எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள்
ஆம்பூர் அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிர்ப்பை மீறி கடைசி நேரத்தில் ஓடோடி வந்து வேட்பு மனுத் தாக்கல் செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சியை பட்டியலின மக்கள் போட்டியிடும் தொகுதியாக ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைக்கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வந்தனர்.
இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இறுதிநாளான இன்று வரை 9 வார்டுகளிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யாமல் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி இன்று பெண் ஒருவர் இறுதி நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
அந்தப் பெண்ணுக்கு எதிராக அம்மலைக்கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்துமதி என்ற அந்த பெண்ணை தொடர்ந்து 10 நாள்களாக இங்குள்ள மக்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இறுதி நேரத்தில் அவர் ஓடோடி வந்து வேட்புமனுவை தாக்கல் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே வேட்பு மனுத்தாக்கல் செய்த பெண்ணின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி இந்துமதி ஒருவர் மட்டுமே அத்தொகுதிக்கு மனுதாக்கல் செய்திருக்கிறார். அதனால் அவர் போட்டியின்றி தேர்வாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.