பெண் என்பதால் விளையாட்டில் புறக்கணிக்கலாமா? உயர்நீதிமன்றம் அதிருப்தி

chennaihighcourt சமீஹா பர்வீன்
By Petchi Avudaiappan Aug 12, 2021 08:16 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச போட்டியில் பங்கேற்க விடாமல் விளையாட்டு வீரர்கள் புறக்கணிக்கப்படுவதை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

செவித்திறன் குறைப்பாடு உடைய கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சமீஹா பர்வீன் என்ற பெண் தேசிய காது கேளாதோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் செவித்திறன் குறைப்பாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நடத்தப்படும் தடகள விளையாட்டு போட்டிக்கான தகுதிப்போட்டிகள் டெல்லியில் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் இந்திய அளவில் கலந்து கொண்ட 12 பேரில், தகுதி சுற்றில் தகுதி பெற்றும் போட்டிக்கு செல்பவர்களில் நான் மட்டும் பெண் என்பதால் என்னை போலந்து நாட்டிற்கு அழைத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன் சமீஹா பர்வின் தடகள போட்டிகளில் இதுவரை பெற்றுள்ள பதக்க விவரங்களை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

மேலும் தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அனுமதி மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்து நாளைக்குள் இந்த வழக்கு தொடர்பாக மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்காவிட்டால் நீதிமன்றம் நேரடியாக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து வழக்கை நாளைக்கு தள்ளி வைத்தார்.