வேலைக்கு வராதே.. சொன்ன பெண் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய நபர் - அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்
புனேவை சேர்ந்த பெண் ஒருவர் தையல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் மிலிந்த் நாத்சாகர் என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன்பு மிலிந்தை அப்பெண் வேலைக்கு வராதே என்று கூறி வேலையை விட்டு தூக்கியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த மிலிந்த் நேற்று நள்ளிரவில் அக்கடைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, அப்பெண்ணிற்கும், மிலிந்த்திற்கும் வாக்குவாதம் முற்றியது. இதனையடுத்து, அப்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார் மிலிந்த். உடலில் தீப்பிடித்து அலறிய அப்பெண் மிலிந்த்தை கட்டிப்பிடித்துள்ளார்.
அப்போது, இருவர் உடம்பில் தீ மளமளவென பரவி எரிந்தனர். இதைப் பார்த்த அருகில் செல்போன் கடை வைத்திருந்த நபர் ஓடி வந்து அவர்களை காப்பாற்ற முயற்சி செய்தார். அப்போது, அந்தத் தீ கடைக்காரர் மீது பரவியது.
இதனையடுத்து, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து மூவரையும் மீட்டனர். ஆனால், தீயில் கருகி மிலிந்தும், அப்பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காப்பாற்ற சென்ற கடைக்காரர் மட்டும் 35 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலையை விட்டு நீக்கிய பெண்ணை தீயிட்டு கொளுத்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
