குழந்தைகளை கொன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்த பெண் - சேலத்தில் சோக சம்பவம்
சேலம் அருகே இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகில் உள்ள கே.மோரூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் - மரகதம் தம்பதியினர் செல்வகணபதி, கோகுல கிருஷ்ணன் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இதனிடையே வேறொரு பெண்ணுடன் பிரபாகரன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக மரகதத்திற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கணவர் பிரபாகரனிடம் கேட்க இருவருக்குள்ளும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மரகதம் தனது இரண்டு குழந்தைகளையும் அவரது தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்த விவசாய கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். மேலும் தனக்கு நன்றாக நீச்சல் தெரியும் என்பதால் கால்களை கயிறு மூலம் கட்டியதோடு கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த பிரபாகரன் வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததை அறிந்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். பிரபாகரனின் உறவினர்களும் சந்தேகமடைந்து பல இடங்களில் தேடிய நிலையில் கிணற்றில் பார்த்தபோது , மூன்று பேரும் கிணற்றில் விழுந்த அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்த காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி மரகதம் மற்றும் இரண்டு குழந்தைகளையும் சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் மூன்று உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கணவர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.