வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட குக்கர் வெடித்து சிதறியதில் பெண் காயம்..!
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட குக்கர் திடீரென சமைக்கும் போது வெடித்து சிதறியதில் பெண்ணின் முகம் வெந்து போனது.
வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம்
கர்நாடக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றொரு எதிர்க்கட்சியான ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இப்போதே தங்களது பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகளின் பரிசு பொருட்கள் விநியோகமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது பெங்களூரு சோவேஸ்வரா காலணி பகுதியில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சமையல் குக்கர்களை இலவசமாக வழங்கினர். இதனை போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்களும் பெற்றனர்.
குக்கர் வெடித்து பெண் காயம்
இந்த நிலையில் இலவசமாக கொடுக்கப்பட்ட குக்கரில் பெண் ஒருவர் சமைத்து கொண்டிருந்த போது திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பெண்ணுக்கு கை, கழுத்து முகம் உள்ளிட்ட பகுதிகளில் தீ காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் உடனடியாக அங்கிருந்தவர்க்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு மருத்துமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குக்கர் திடீரென வெடித்து சிதறியதால் இலவச குக்கர் பெற்ற மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கர்நாடகாவில்
வாக்காளர்களுக்கு இலவச பொருட்கள் வழங்கப்படுவது என்பது அதிகரித்து வருகிறது.
அரசியல் கட்சியினர் மக்களிடம் இலவசங்களை கொடுத்து வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர். மக்களுக்கு டிவி, உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுவதால்
மக்கள் இலவசங்களை நம்பி விலை போய்விடக் கூடாது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.