ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் இல்லை - திருமாவளவன்
ஆளுநரிடம் பல்கலைக்கழக மாணவி பட்டம் பெற மறுத்தது சபை நாகரிகம் அல்ல என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மறுத்த மாணவி
பெரம்பலுாரில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழாவில், மாணவி ஒருவர், கவர்னர் ரவியிடம் பட்டம் பெற மறுத்தது, சபை நாகரிகம் அல்ல.
அவரது கொள்கை பிடிப்பும், துணிச்சலும் பாராட்டத்தக்கது. இருப்பினும், சபை நாகரிகம் என்பதும் முக்கியமானது. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவர் செயல், ஒரு வகையில் ஏற்புடையது என்றாலும், தனிமனித அணுகுமுறை என வரும்போது, சபை நாகரிகமும் முக்கியம்.
பார்லிமென்ட் குழுவில் நான் இடம் பெற்று, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்தபோது, அவர் என்னை கேலி செய்த நிலையிலும், எல்லாரையும் போல நான் கைகுலுக்க நேர்ந்தது. அவர் மீது கோபம், வருத்தம், வலி இருந்தது;
திருமா அறிவுரை
அவரது நடவடிக்கையை கண்டிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தது. எல்லாவற்றையும் விட, சபை நாகரிகம் கருதி, எல்லாரும் எப்படி நடந்து கொண்டனரோ, அதை நாம் மதிக்க வேண்டும் என எண்ணினேன். அதே உணர்வோடு, இதையும் பார்க்கிறேன்.
தமிழையும், தமிழ் மக்களையும் கவர்னர் அவமதித்து பேசி வருகிறார். இதனால், அவரது தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம். தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், துாய்மை பணியாளர்களை வீட்டிற்கு அழைத்து பேசி இருக்கக்கூடாது.
ஜனநாயக முறைப்படி தலைவர்கள் தான் மக்களை தேடிச் செல்ல வேண்டும். இதை விஜய் கற்று கொள்ளவில்லை. காலம் அதை அவருக்கு கற்று கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.