ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்
ராஜஸ்தானில் ஒரே இரவில் வெவ்வேறு நபர்களால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜான்வர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு 14 வயதில் திருமணம் நடந்துள்ளது. அதன்பின் திருமணமான 3 ஆண்டுகளில் தனது கணவரின் தங்கையை கொலை செய்த குற்றத்துக்காக ஜோத்பூர் நகரின் மாண்டோரில் உள்ள சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் ஜான்வர் பகுதியில் அப்பெண்ணின் பெற்றோரிடம் அக்குழந்தை வளர்ந்து வந்துள்ளது. இதனிடையே தன் குழந்தையைப் பார்ப்பதற்காகக் கடந்த மே 20 ஆம் தேதி இரவு சீர்திருத்தப்பள்ளியிலிருந்து தப்பி சென்றுள்ளார்.
ஜான்வருக்கு செல்ல ஜோத்பூரில் உள்ள பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால் அங்குள்ள சாலையில் காத்திருந்துள்ளார். அப்போது குல்தீப் பிஷ்னோய் (23) என்ற இளைஞன் அந்த பெண் பேருந்து நிலையத்துக்குச் செல்ல உதவுவதாகக் கூறி தனது வாகனத்தில் லிப்ட் கொடுத்துள்ளார். ஆனால் பேருந்து நிலையம் செல்லாமல் அந்த பெண்ணை தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்பு அந்த பகுதியிலிருந்த பாலத்துக்கு அருகில் அந்தப் பெண்ணை இளைஞர் இறக்கிவிட்டுள்ளார். அந்த பாலத்துக்கு அருகில் என்ன செய்வது எனத் தெரியாமல் நின்ற அந்த பெண்ணுக்கு உதவுவதாக ஓட்டுநர் பாபுராம் ஜாட் (22) என்பவர் அந்த பெண்ணுக்கு லிப்ட் கொடுத்துள்ளார்.
ஆனால் அவரும் அந்த பெண்ணை கைலானா ஏரிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் மே 21 ஆம் தேதி காலை 5.30 மணியளவில் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார். கடைசியாக வீட்டுக்கு வந்த பெண் தனது பெற்றோரிடம் இதுதொடர்பாக கூற அவர்கள் மாண்டோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதனையடுத்து பிஷ்னோய் மற்றும் பாபுராம் ஜெட் இருவரும் கைது செய்யப்பட்டனர்.