தவறாக ஹேர்கட் செய்யப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 கோடி இழப்பீடு : நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு
டெல்லியில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஓட்டலான ஐடிசி மவுரியாவில் உள்ள சலூனுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி மாடலிங் துறையை சேர்ந்த 42 வயது பெண் முடி வெட்டுவதற்காக சென்றுள்ளார்.
தனது நீண்ட கூந்தலை 4 இன்ச் ட்ரிம் செய்ய அவர் சொன்ன நிலையில், முடி வெட்டுபவர் கூந்தலை மொத்தமாக வெட்டியுள்ளார். மேலும் தலையில் அமோனியாவை கொண்டு சிகிச்சை செய்ததில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த பெண் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் அளித்தார் ஆனால் ஹோட்டல் நிர்வாகம் அதுகுறித்து கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண், தேசிய நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். தனது தலைமுடியை 4 அங்குலங்கள் மட்டுமே வெட்ட சொன்னேன். ஆனால் தோள்களைத் தொடும் அளவில் முடியை வெட்டி விட்டார்கள். அத்துடன் அமோனியா கலந்த சிகிச்சை அளித்ததால் கடுமையான எரிச்சல் ஏற்பட்டது.
இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தேன். அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள். அதற்கு கட்டணம் வேண்டாம் என்று கூறினார்கள். இருப்பினும் அந்த சிகை அலங்காரம் நிபுணருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் உரிய விளக்கமும் அளிக்க வேண்டும். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நுகர்வோர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இதற்கான தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.
அதில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் சிகை அலங்கார நிபுணர் முடி சிகிச்சையின் போது தலை முடியை தவறாக வெட்டியதுடன் , உச்சந்தலையில் அதிகப்படியான அமோனியாவை வைத்து சிகிச்சை அளித்தால் சேதம் ஏற்பட்டு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
பெண்கள் தங்கள் கூந்தலை பற்றி மிகவும் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் ஒரு தொகையை செலவிடுகிறார்கள்.தலைமுடியுடன் உணர்வு பூர்வமாகவும் இணைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் மன உளைச்சலையும், இழப்பையும் கருத்தில் கொண்டு ஐடிசி நிர்வாகம் அந்த பெண்ணுக்கு இரண்டு கோடி இழப்பீடு வழங்க தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.