50 லட்சம் கடன் வாங்கிவிட்டு தப்பி ஓடிய பெண்
பல பெண்களிடம் சுமார் 50 லட்சம் வரையில் பணத்தை பெற்றுக்கொண்டு பெண் ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில், 50க்கும் மேற்பட்ட பெண்களின் பெயரில், 50 லட்சம் கடன் பெற்று தலைமறைவான பெண் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்தவர் பிரியா(42).
ஜவுளிக்கடை நடத்தினார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் குறைந்த வட்டியில் கடன் பெற்று தருவதாக பல பெண்களிடம் கூறினார். மேலும் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகங்களின் நகல்களில் கையொப்பமிட்டு கொடுத்தால், 1000 ரூபாய் கமிஷன் தருவதாகவும் தெரிவித்தார். இதை நம்பிய, 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல்களை கையொப்பமிட்டு அவரிடம் கொடுத்தனர்.
அதைக்கொண்டு அவர்கள் பெயரில், தனியார் நிறுவனம் ஒன்றில், 50 லட்சத்துக்கு மேல் கடன் பெற்ற பிரியா, ஜவுளிக்கடையை மூடிவிட்டு, குடும்பத்துடன் தலைமறைவானார். இந்நிலையில் கடனை திரும்ப செலுத்தும்படி நிதி நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட பெண்களிடம் வலியுறுத்தினர். பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று எஸ்.பி., கார்த்திக்கிடம் புகார் அளித்தனர். அவர் குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.