யாஷ் புயல் எதிரொலி...பனைமரம் சரிந்து விழுந்து பெண் உயிரிழப்பு...
இராமநாதபுரத்தில் பலத்த காற்று காரணமாக வீட்டின் முன் நின்றிருந்த பனைமரம் சாய்ந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தை அடுத்த வெண்ணத்தூர் மேட்டு கொள்ளை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டி என்பவரது மனைவி கார்த்திகா, 6 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
குடும்பச்சூழல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாண்டி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கார்த்திகாவும், அவரது மகளும் மட்டுமே வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே யாஸ் புயல் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்று அடித்து வருகிறது. இந்நிலையில் வீட்டின் முன்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பாண்டியின் மனைவி கார்த்திகா மீது வீட்டின் முன்பாக நின்றிருந்த பனைமரம் பலத்த காற்றின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் கார்த்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.