மனைவியை கொன்ற வழக்கில் தண்டனை அனுபவித்த கணவன்... ஆனால் உண்மையிலேயே மனைவி...

By Petchi Avudaiappan May 03, 2022 06:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

பீகாரில் கணவனால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட பெண் பஞ்சாப்பில் தனது காதலருடன் குடும்பம் நடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் என்ற இடத்தை சேர்ந்த தினேஷ் ராம் என்பவர்  சாந்தி தேவி என்ற பெண்ணை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி ஆறு ஆண்டுகளான நிலையில் திடீரென சாந்திதேவி கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதற்கிடையில் சாந்திதேவியின் தந்தை யோகேந்திர யாதவ் தனது மகளை அவரின் வீட்டிற்கு பார்க்க சென்றுள்ளார். அவர் அங்கு இல்லை என்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர் தனது மருமகன் தினேஷ் ராம் மீது போலீசில் புகார் செய்தார். அதில் தன் மகளிடம் தினேஷ் ராம் கடந்த ஆண்டு சீதனமாக மோட்டார் பைக் மற்றும் 50 ஆயிரம் பணம் கேட்டுகேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறினார்.

தற்போது வீட்டிற்கு சென்று பார்த்தபோது சாந்திதேவி அங்கு இல்லை. ஆகவே தினேஷ் ராம் தங்களது மகளை கொலை செய்து விட்டார் என்று போலீசில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தினேஷ் ராமை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் சாந்திதேவி இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். கடைசிவரை சாந்தியின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் உடலை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் சாந்தி தேவி பயன்படுத்திய மொபைல்போன் எங்கு இருக்கிறது என்பதை கண்காணிக்க ஆரம்பித்தனர். அது பஞ்சாப்பின் ஜலந்தரில் இருப்பது தெரிய வந்ததையடுத்து தனிப்படை போலீசார் ஜலந்தருக்கு விரைந்து சென்றனர்.

அங்கு தீவிர தேடுதலுக்கு பிறகு சாந்திதேவி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் இறக்கவில்லை என்று தெரிந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சாந்திதேவி தனது காதலனுடன் ஜலந்தரில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. 

பின்னர் அவரை போலீசார் பீகாருக்கு அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சாந்தியின் கணவர் தினேஷ் சிறையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளார். சாந்தி தேவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.