கொரோனா நோயாளி மரணத்தில் திடீர் திருப்பம்: பெண் பணியாளர் கொலை செய்தது அம்பலம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக பெண் துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த பேராசிரியர் மவுலியின் மனைவியான சுமிதாவிற்கு கொரோனா நோய் ஏற்பட்டதால் கடந்த 22ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 23ஆம் தேதி மவுலி தனது மனைவியை பார்க்க சென்ற போது சுமிதா வார்டில் இருந்து காணாமல் போயுள்ளார்.
இதனால்அதிர்ச்சியடைந்த மவுலி மருத்துவ நிர்வாகத்திடம் தகவல் அளித்தார். தகவலின் பேரில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முழுவதும் சுமிதாவை தேடி பார்த்த போது கிடைக்கவில்லை.
இதனால்மவுலி கடந்த 30 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு தனது மனைவியின் புகைப்படத்தை எடுத்து வருவதாக சென்றவருக்கு கொரோனா நோய் ஏற்பட்டு வீட்டு தனிமையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி மருத்துவமனையின் 8 வது மாடியிலிருந்து துர் நாற்றம் வீசியதால் மருத்துவ ஊழியர்கள் சென்று பார்த்த போது அழுகிய நிலையில் சுமிதா இறந்துகிடப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சுமிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் 70% மூச்சு திணறலுடன் இருந்த சுமிதா இயற்கையாகவே மரணித்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்ததாக சென்னை காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த நிலையில் பணம் மற்றும் செல்போனை கொள்ளையடிப்பதற்காக பெண் துப்புரவு பணியாளரான ரதிதேவி என்பவர் சுமிதாவை கழுத்தை நெறித்து கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அந்த ஒப்பந்த பெண் ஊழியரை போலீசாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் சுமிதாவிடம் நிறைய பணம் மற்றும் விலையுயர்ந்த செல்போன் இருப்பதை பலமுறை கண்டதாகவும், அவரிடம் பணம் பறிக்க திட்டமிட்டு கடந்த 22ஆம் தேதி இரவு 12 மணிக்கு டெஸ்ட் எடுக்க வேண்டுமென சுமிதாவிடம் கூறி வீல் சேரில் படுக்கவைத்து துப்புரவு தொழிலாளர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய லிப்டில் கொண்டு சென்றேன்.
8 வது மாடிக்கு கொண்டு சென்று கயிற்றை கொண்டு சுமிதாவின் கழுத்தை நெறித்து துடிதுடிக்க கொலை செய்தேன் என்றும், அவரிடமிருந்த 9500 ரூபாய் பணம்,செல்போன் ஆகியவற்றை திருடி கொண்டு அடையாளம் காண்பதற்காக சுமிதாவின் தலைகீழ் பகுதியில் செருப்பை வைத்துவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கொரோனா நோயால் இறந்த நபர்களுக்கு பிரேத பரிசோதனை செய்யாமல் உடலை ஒப்படைப்பது வழக்கம்.அதே போல் சுமிதா உடலையும் ஒப்படைப்பார்கள் என எண்ணி கொலை செய்தேன்.மேலும் கொரோனா அறையில் சிசிடிவி வேலை செய்யாததால் தைரியமாக யாரும் கண்டுபிடிக்கமாட்டார்கள்,சந்தேகம் வராமல் இருக்க வழக்கம்போல் வேலைக்கு வந்ததாக விசாரணையில் ரதிதேவி தெரிவித்தார்.
ஆனால் போலீசார் இரவு பணியில் இருந்த அனைத்து ஊழியர்களையும் விசாரணை செய்த போது தனது பெயரை கூறியதால் தன்னை நெருங்கி போலீசார் கைது செய்ததாக விசாரணையில் தெரிவித்தார். திருடிய பணத்தை செலவு செய்துவிட்டதாகவும்,பணப்பற்றாக்குறையினால் அதிக பணம் கிடைக்கும் என்று ஆசைப்பட்டு கொலை செய்ததாக ரதிதேவி கண்ணீருடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பின்னர் திருடிய செல்போனை ரதிதேவியிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த கொலையில் ரதிதேவிக்கு உடந்தையாக யாரேனும் உள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் ரதிதேவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.