பண்டிகை வந்தாலே ரசிகர்கள் தொல்ல தாங்க முடியல - கொந்தளித்த ரஜினி பக்கத்து வீட்டு மூதாட்டி!
ரஜினியின் ரசிகர்கள் அவரது இல்லம் முன் கூடி கூச்சலிடுவது தொல்லையாக இருப்பதாக அவரது பக்கத்து வீட்டு மூதாட்டி தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தின் இல்லம் முன், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரஜினியின் பிறந்தநாள் போன்ற தினங்களில் ரசிகர்கள் திரள்வது வழக்கம்.
அந்தவகையில் பொங்கல் பண்டிகையான நேற்று அவரது போயஸ் கார்தான் வீட்டின் முன் ரசிகர்கள் திரண்டனர். இதனையடுத்து ரசிகர்களை சந்தித்த ரஜினி "அனைவரும் ஆரோக்கியம், மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
ஒழுக்கத்திலும் சிந்தனையிலும் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும்" என வாழ்த்து தெரிவித்தார்.
வாக்குவாதம்
இதற்கிடையில் ரஜினியின் பக்கத்து வீட்டு வயதான பெண்மணி ஒருவர், ரஜினி ரசிகர்கள் தொல்லை குறித்து பாதுகாவலர்கள் மற்றும் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் "தலைவா.. தலைவா என ரசிகர்கள் கோஷம் போடுவார்கள். எங்களை மாதிரி இந்த தெருவில் 21 வீட்டுக்காரர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஏன் உங்க (ரஜினி) வீட்டு கேட்டை திறந்து உள்ளே விட வேண்டியது தானே. தலைவரை பார்க்க வேண்டியது தானே. நீங்க கேட்டை மூடியே வைக்கிறீங்க.
இவங்க எல்லாரும் எங்க வீட்டு முன்னாடி வந்து தான் இப்படி கத்தி கூச்சலிடுகிறார்கள். நாங்களும் வரி காட்டுறோம். ஆனால் எங்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. போதாக்குறைக்கு காலையில இப்படி பண்டிகை தினம் அதுமா இப்படி தொந்தரவு செய்றாங்க. சாமி கூட கும்பிட முடியல" என்றார்.