ஆபாசமாக பேசிய திமுக பிரமுகர் - தற்கொலை செய்துக் கொண்ட பெண்
மயிலாடுதுறையில் திமுக பிரமுகர் ஆபாசமாக பேசியதால் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதாரப் பரப்புரையாளராக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் வீடுதோறும் சென்று சுகாதாரப் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த இவர்களது பணிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்ததால் அந்த இடத்தில் திமுகவைச் சேர்ந்தவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து குத்தாலம் நகர திமுக செயலாளர் சம்சு என்பவரை சந்தித்து தங்களுக்கு மீண்டும் பணி கொடுக்கும்படி நதியா கேட்டுள்ளார்.
அப்போது அவர் நதியாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நதியா வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
ஆனால் உடல்நிலை மேலும் மோசமானதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இதனிடையே நதியாவின் இறப்புக்கு திமுகவினர் சிலரே காரணம் என்றும் அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறும் நதியாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.