ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை : ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
மதுரையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணியிடத்தில் தொந்தரவு
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதால் கருணை அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நாகலெட்சுமிக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் வேலை வழங்கியதாக கூறப்படுகிறது.
நாகலட்சுமி கடந்த ஒன்றரை வருடங்களாக 100 நாள் வேலை பொறுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால், ஒரு சில நாட்களாக அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் நாகலெட்சுமிக்கு பணி செய்யவிடாமல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது
தற்கொலை
இதனால் மனமுடைந்த நாகலட்சுமி, நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தனது குழந்தைகளுடன் அரசு பேருந்தில் சென்று கொண்டு இருக்கும் போது, தனது குழந்தைகளை அருகில் உள்ள சக பயணியிடம் கொடுத்து, தற்கொலை கடிதத்தையும் வைத்துவிட்டு, பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து நாகலட்சுமியை உடனடியாக மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் எழுதிய தற்கொலை கடிதத்தை மையாக கொண்டு, தலைமறைவாகி உள்ள கவுன்சிலர்கள் வீரகுமார், பாலமுருகன் மற்றும் கிளார்க் முத்து ஆகியோரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.
இந்நிலையில், நாகலட்சுமியின் தற்கொலைக்கு காரணமாக இருந்த கள்ளிக்குடி மையிட்டான்பட்டியின் ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.