சேர்ந்து வாழ ஆசைப்பட்டு காதலுக்காக ஆணாக மாறிய பெண் ; கழட்டிவிட்டு சென்ற காதலி!
காதல் வயப்பட்ட மற்றொரு பெண்ணை கட்டாயப்படுத்தி உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யவைத்து பரிதாபமாக ஏமாற்றிச்சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த ஜெயசுதா தமுக்கம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோயிலுக்குச் சென்றபோது செந்திலா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இரு பெண்களும் திருமணம் செய்துகொண்டால் சமூகம் கேலி பேசும் என்றும் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் கூறிய செந்திலா ஜெயசுதாவை ஆணாக மாறவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.
இதனை நம்பி காதலுக்காக சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையுடன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஜெயசுதா திருநம்பியாக மாறிக்கொள்ள உடல் உறுப்பை அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தியதன் பேரில் ஹார்மோன் ஊசியையும் போட்டு வந்துள்ளார் ஜெயசுதா. இதனை தொடர்ந்து ஜெயசுதா என்ற தனது பெயரை ஆதிசிவன் என மாற்றிக்கொண்டு தைப்பொங்கல் அன்று ஜெயசுதா என்கிற ஆதிசிவனும் செந்திலாவும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
செந்திலாவின் பெற்றோர்கள் அவரை தேடிய நிலையில் அவர் எங்கும் கிடைக்காததால் இரண்டு மாதங்களுக்கு பிறகு தனது தாய்க்கு போன் செய்த செந்திலா ஆதிசிவனுடன் திருமணமாகி திருப்பரங்குன்றத்தில் ஒன்றாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மாப்பிள்ளையின் விவரம் குறித்து விசாரித்தபோது, தோழியாக இருந்த ஜெயசுதாவை தான் ஆணாக மாற்றி திருமணம் செய்துகொண்டதாக செந்திலா தெரிவித்ததை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் செந்திலாவை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்திலா பெற்றோர்கள் புகார் கொடுத்ததை அடுத்து இருவரையும் அழைத்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செந்திலா ஆதிசிவனுடன் ஒன்றாக வாழ பிடிக்கவில்லை என்றும், தனது பெற்றோருடன் செல்வதாகவும் கூறிவிடவே ஜெயசுதா என்ற ஆதிசிவனுடன் செல்ல மறுத்த நிலையில் காவல்நிலையத்தில் இருதரப்பினரிடமும் எழுதி வாங்கிகொண்டு அனுப்பி வைத்தனர்.
பாலினத்தை மாற்றி பணத்தையும் இழந்து, தாய் - தந்தையும் வீட்டில் சேர்த்து கொள்ளாததால் காதலிக்காக ஆணாக மாறிய ஜெயசுதா தற்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அத்துடன் தனக்கு உரிய நீதி வேண்டும் எனவும் அவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.