ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாலிபான்கள் தாக்குதல்

afghanistan womenattacking
By Petchi Avudaiappan Sep 04, 2021 09:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய நிலையில் அங்கு கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை நிர்வகித்து வருகின்றனர். அவர்களது ஆட்சியில் உயிர்வாழ பயந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

தாலிபான் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பெண்கள் சுகாதாரத்துறையிலும், பிற துறைகளிலும் வேலை செய்யலாம் என்றும் பெண்களுக்கு எதிராக பாகுபாடு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிதாக உருவாகவுள்ள ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் பெண்களின் பங்கும் இருக்க வேண்டும் எனக் கோரி அந்நாட்டு பெண்கள் சிலர் காபூலில் உள்ள அதிபர் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அதிபர் மாளிகையை நோக்கி செல்லவிடாமல் தாலிபான்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சமூக செயற்பாட்டாளரான நர்கிஸ் என்பவரை தாக்கியதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. மேலும் பேரணியை கலைக்க வானை நோக்கி துப்பாக்கியால் தாலிபான்கள் சுட்டனர். இத்தாக்குதலுக்கு ஆப்கானில் உள்ள பெண்கள் நல அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.