கட்டாய உறவுக்கு அழைத்ததால் கொலை.. திமுக பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்
சென்னை மணலியில் திமுக பிரமுகர் கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பெண் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மணலி பேசின் பாலம் சாலையை சேர்ந்த சக்கரபாணி(65) என்பவர் திமுகவின் ஏழாவது வட்ட பிரதிநிதியாக உள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள வியாபாரிகள், மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மே 10 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சக்கரபாணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து தனது தந்தையை காணவில்லை என மகன் நாகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மணலி உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
சக்கரபாணியின் செல்போன் சிக்னலை வைத்து துப்பு துலங்கிய தனிப்படை போலீசார், ராயபுரம் கிரேஸ் கார்டன் 3ஆவது தெருவில் உள்ள தமீம்பானு என்பவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்ததில் வீட்டின் குளியல் அறையிலிருந்த சாக்குமூட்டையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட அவரின் உடல் கிடைத்தது.
விசாரணையில் தமீம்பானுவும் தனது தம்பி வாசிம் பாஷாவும் சேர்ந்து சக்கரபாணியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தமீன்பானு, அவருடைய தம்பி வாசிம் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் டில்லி பாபு (29) தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார். சக்கரபாணியை கொலை செய்தது எப்படி என்பது குறித்து போலீசாரிடம் தமீம்பானு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மணலியில் உள்ள சக்கரபாணியின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன்.
எனது கணவர் அஸ்லாம் உஜைனி சென்னை திநகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வீட்டுக்கு வருவார். எனக்கு இரு மகள்கள் உள்ளனர். எனக்கு சக்கரபாணி வட்டிக்கு பணம் கொடுத்து உதவியதால் எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.
பிறகு 3 ஆண்டுகளாக சக்கரபாணிக்கு தெரியாமல் ராயபுரம் கிரேஸ் கார்டன் 3வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் 3வது மாடியில் குடியேறினேன். இதை தெரிந்து கொண்ட அவர் கடனை கேட்டு வருவது போல் என் வீட்டுக்கு வந்து உல்லாசமாக இருப்பார். தொடர்ந்து எனது வீட்டிற்கு வந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை.
அதேசமயம் எனக்கும் கீழ் வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் டில்லி பாபுவுக்கும் எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் எனது கணவரும் சக்கரபாணியும் இல்லாத நேரத்தில் உல்லாசமாக இருந்து வந்தோம். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி இரவு சக்கரபாணி குடிபோதையில் எனது வீட்டுக்கு வந்தார். நான் எனது 2 மகள்களும் வீட்டில் இருக்கிறார்கள் என்பதால் வீட்டுக்குள் வரவேண்டாம் என்றேன்.
ஆனால் அதையும் மீறி வீட்டுக்குள் வந்த அவர் வலுக்கட்டாயமாக என்னை கட்டிப்பிடித்து உறவுக்கு வரும்படி அழைத்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் அவரிடம் சண்டை போட்டதால் சத்தம் கேட்டு கீழ் வீட்டிலிருந்த எனது தம்பி வாசிம் பாஷா எங்கள் வீட்டிற்கு வந்தான். இனி உயிரோடு சக்கரபாணியை விட்டு வைக்கக் கூடாது என கருதி அவரை கீழே தள்ளி நானும் வாசிமும் அரிவாள்மனை மற்றும் கத்தியால் வெட்டினோம்.
பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க அவரது தலையை துண்டித்து தலையையும், குடலையும் உருவி தனித்தனி பிளாஸ்டிக் கவரில் போட்டு கட்டினோம். பின்னர் டில்லிபாபுவும் வாசிம் பாஷாவும் ஆட்டோவில் கொண்டு சென்று குடலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பைபர் படகுகள் நிற்கும் பகுதியிலும், பின்னர் தலையை அடையாறு மலர் மருத்துவமனை அருகே கல்லை கட்டி ஆற்றில் வீசிவிட்டும் வீடு திரும்பினர்.
பொழுது விடிந்ததும் பெரிய கத்தி வாங்கி வந்து சக்கரபாணியின் உடலை 10 துண்டுகளாக வெட்டி தனித்தனியாக பிளாஸ்டிக் பையில் சுற்றி சாக்கு மூட்டையில் கட்டி குளியலறையில் வைத்தோம். துர்நாற்றம் வீசாமல் இருக்க வீடு முழுவதும் வாசனை திரவியங்களை தெளித்தோம். ஆள்நடமாட்டம் இருந்ததால் சக்கரபாணியின் உடலை அப்புறப்படுத்த முடியாமல் வீட்டிலேயே வைத்தோம்.
இரவு எப்படியாவது அப்புறப்படுத்த வேண்டும் என இருந்த நிலையில் போலீசார் கண்டுபிடித்து விட்டனர் என தமீம்பானு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கூவம் ஆற்றில் 3வது நாளாக தலையை தேடும் பணி நடைபெற்று வருகிறது.