சென்னையில் ஹெல்மட் அணியாத 3926 பேர் மீது வழக்கு பதிவு

Chennai Tamil Nadu Police
By Thahir May 23, 2022 06:38 PM GMT
Report

சென்னை மாநகரில் விபத்துகளை மற்றும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று முதல் இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவரும் ஹெல்மட் அணிந்து பயணிப்பது இன்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று சென்னை முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இது குறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (23.05.2022) சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாததற்காக 1,903 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீதும், 2,023 வழக்குகள் பின்னிருக்கை பயணிகள் மீதும் பதியப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் விதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என எச்சரிக்கப்படுகிறது.

ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மற்றும் பின்னிருக்கை நபர் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த சிறப்பு தணிக்கை மேலும் தொடரும். அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து, விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்கவும், விபத்தில்லா நகரை அடையவும் சென்னை காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.