வீட்டில் சூனியம் இருப்பதாக தனியே வாழும் பெண்களை குறி வைத்து மோசடி செய்த கும்பல் அதிரடி கைது
வீட்டில் சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி ரூ.85 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலை சென்னை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
தாம்பரத்தை அடுத்த கன்னடபாளையத்தைச் சேர்ந்த அந்தோணி அம்மாள் என்பவர், கணவர் மற்றும் உறவினர்களைப் பிரிந்து தனியே வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு அறிமுகமான பாத்திமா என்பவர், வீட்டில் சூனியம் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதனை எடுக்க பரிகார பூஜைகள் செய்ய வேண்டுமென சொல்லி, 2018ஆம் ஆண்டு முதல் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த அந்தோணி அம்மாள், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரில் பாத்திமா மற்றும் அவரின் சகோதரர் அபு ஹசன், ராஜேந்திரன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனியே வாழும் பெண்களை குறித்து வைத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இப்படி பல பெண்களிடம் 85 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியிருப்பதும், அந்த பணத்தில் தாம்பரத்தை அடுத்து இரும்புலியூரில் வீடு வாங்கி இருப்பதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.