அரச குடும்பத்தில் இன பாகுபாடா? முதன்முறையாக மௌனம் கலைத்த இளவரசர் வில்லியம்
ஓப்ரா வின்ஃப்ரே முன்னெடுத்த ஹரி- மேகன் தம்பதியின் நேர்காணல் தொடர்பில் தாம் ஹரியிடம் பேச இருப்பதாக இளவரசர் வில்லியம் முதன்முறையாக தெரிவித்துள்ளார். இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி சகோதரர்கள் கடந்த ஓராண்டாக பேசிக்கொள்வதில்லை. இந்த நிலையிலேயே பிரித்தானிய அரச குடும்பத்தை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ள நேர்காணல் வெளியானது.
மட்டுமின்றி, பிரித்தானிய அரச குடும்பம் இனரீதியான பாகுபாடு கொண்டது என்ற மேகன் மெர்க்கலில் குற்றச்சாட்டு, அரச குடும்பத்து மூத்த உறுப்பினர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனையடுத்து, பிரித்தானிய அரச குடும்பம் இனரீதியான பாகுபாடு பார்ப்பதில்லை என இளவரசர் வில்லியம் வெளிப்படையாக பதிலளித்தார்.
மேலும், ஓப்ரா வின்ஃப்ரேவின் நேர்காணல் வெளியாகி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையில், தமது சகோதரருடன் இந்த விவகாரம் தொடர்பில் தாம் இன்னமும் பேசவில்லை எனவும், ஆனால் கண்டிப்பாக பேச வேண்டும் எனவும், அது தமது கடமை எனவும் இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லண்டனில் உள்ள பாடசாலை ஒன்றில், தமது மனைவி கேட் மிடில்டனுடன் வருகை தந்த போதே இளவரசர் வில்லியம் தமது சகோதரருடன் பேசுவது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் மேகன் மெர்க்கல் தொடர்ந்து கேட் மிடில்டனை குறிவைத்தே பல விடயங்களை பேசியுள்ளார். அது வில்லியம்- கேட் தம்பதியை மிகவும் ஆழமாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹரி- மேகன் திருமணத்தை கடுமையாக எதிர்த்தவர் இளவரசர் வில்லியம், மேகன் மெர்க்கல் தொடர்பில் ஹரியை ஆபாசமாக இளவரசர் வில்லியம் திட்டியதாகவும் தகவல் வெளியானது. இளவரசி டயானாவின் மறைவுக்கு பின்னர் வில்லியம்- ஹரி சகோதரர்கள் தங்களுக்கு இடையே மிகவும் நெருக்கமான உறவை பாதுகாத்து வந்துள்ளனர்.
ஆனால் மேகன் மெர்க்கல் விவகாரத்தில் ஹரி மீது இளவரசர் வில்லியத்திற்கு மனக்கசப்பு ஏற்பட்டதுடன், விரிசலும் பெரிதானது. மட்டுமின்றி அரச குடும்பத்தைவிட்டு வெளியேறும் முடிவுக்கு வந்த ஹரி- மேகன் தம்பதி ராணியாருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என்ற வருத்தமும் இளவரசர் வில்லியத்திற்கு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஓப்ரா நிகழ்ச்சி தொடர்பில் ஹரியுடன் பேச இருப்பதாக குறிப்பிட்டுள்ள இளவரசர் வில்லியம், அது எப்போது என்பதை மட்டும் குறிப்பிடவில்லை.
