இந்தியா- நியூசிலாந்து போட்டியில் சர்ச்சையான விக்கெட் : கோட்டை விட்ட பேட்ஸ்மேன்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதன் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் கடந்த 25 ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களும், நியூசிலாந்து 296 ரன்களும் எடுத்தன. 

49 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் நியூசிலாந்துக்கு வெற்றி இலக்காக 284 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து பேட் செய்த அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. 

இதனிடையே  4வது நாள் ஆட்டத்தின் போது நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியது.  அஸ்வின் வீசிய ஓவரில் வில் யங்கின் காலில் பந்து பட்டுச் சென்றது. உடனே இந்திய வீரர்கள் அம்பயரிடம் எல்பிடபிள்யூ முறையிட்டனர்.

உடனே அம்பயரும் அவுட் கொடுத்துவிட்டார். இதனால் எதிர்முனையில் இருந்த டாம் லாதமிடம் வில் யங் ஆலோசனை கேட்டார். ஆனால் அதற்குள் ரிவ்யூ கேட்பதற்கான நேரம் முடிந்துவிட்டது. ஆனால் ரீப்ளேவில் பார்த்தபோது பந்து ஸ்டம்பை விட்டு விலகிச் சென்றது தெரியவந்தது.

வில் யங் ரிவ்யூ கேட்க தாமதமானதால் அவுட்டாகி வெளியேறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்