தனித்து போட்டியிடும் தவெக? முக்கிய நிர்வாகி சொன்ன தகவல்
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிட உள்ளதா என்ற விவாதம் எழுந்துள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு போன்ற விஷயங்களில் தீவிரமாக இறங்கியுள்ளன.

திமுக, இதற்கு முந்தைய தேர்தலை களம் கண்ட அதே கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் தேர்தலை சந்திக்க உள்ளது.

அதிமுக நேற்று மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி பங்குபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை மேடையேற்றி தனது வலிமையை காட்டியது.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள சீமானின் நாம் தமிழர் கட்சி, பல தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டது.
அதேவேளையில், தனது முதல் தேர்தலை சந்திக்க உள்ள விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் இன்னும் கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை.
தனித்து போட்டியிடும் தவெக?
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாட்டிலே, தங்கள் கட்சியை தலைமையேற்று கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என விஜய் அறிவித்தார்.

அப்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு குறித்து பேசி வந்த விசிக தலைவர் திருமாவளவன் கூட்டணியில் இணைவார் என எதிர்பார்த்த நிலையில், அவரும் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார்.
தற்போது வரை எந்த கட்சியும் தவெக கூட்டணியில் இணையவில்லை. இதனால் தனித்து போட்டியிட உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெகவிற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியுள்ள நிலையில், தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், திருச்செங்கோடு தொகுதியில் மக்களுக்கு விசில் சின்னத்தை வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்னும் ஓபிஎஸ் மற்றும் தேமுதிக தவிர்த்து அனைத்து கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில் தவெக யாருடன் கூட்டணி என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நாங்கள் மக்களுடன் தான் கூட்டணி வைத்துள்ளோம்.
பொறுத்திருந்து பாருங்கள் எங்கள் தலைவர் மக்களுடன் கூட்டணி வைத்து அதிக இடங்களை ஜெயித்து ஆட்சியைப் பிடிப்பார்" என அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதனால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 2026 சட்டமன்ற தேர்தலை தவெக எதிர்கொள்ள உள்ளதா என்ற விவாதம் எழுந்துள்ளது.
நாளை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தவெக தலைவர் விஜய் தலைமையில் தவெக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், விஜய் கூட்டணி குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.