வேகம் எடுக்கும் கொரோனா ; தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் ஏற்கெனவே 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அது படி படியாக அதிகரித்து தற்போது 111 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, இதன்மூலம் சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 3,080 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில் 109 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்பது போன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்; தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனாவை தடுக்க முகக்கவசம் தொடர்ந்து அணிந்து வரவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா பரவல் இல்லாவிட்டாலும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது" என தெரிவித்தார்.