‘தன் வினை தன்னை சுடும்’ : நீங்க செஞ்சா தப்பில்ல, தொகுப்பாளர் செஞ்சா மட்டும் தப்பு-ஆ? வில் ஸ்மித்தை கலாய்த்தெடுக்கும் நெட்டிசன்கள்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கடந்த 28-ந் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித்திற்கு, சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் மேடையில் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார்.
அப்போது கிறிஸ் நடிகர் வில் ஸ்மித்தின் மனைவியும் நடிகையுமான ஜடா பிங்கெட் ஸ்மிதின் உடல்நிலை பற்றி நகைச்சுவையாக பேசினார்.
இதனால் கோபமடைந்த வில் ஸ்மித், மேடையேறி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்துவிட்டு, பின்பு தன் இருக்கைக்குத் திரும்பினார்.
பின்னர் இதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்ட ஸ்மித், “விழாவில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது.
அன்பு நிறைந்த உலகில் வன்முறைக்கு இடமில்லை. எனது இந்த செயலால் பெரும் சங்கடம் அடைந்திருக்கிறேன். எனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடமும், நிகழ்ச்சி அமைப்பாளர்களிடமும், நிகழ்ச்சியை நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்தவர்களிடமும் மன்னிப்பு கேட்டு க்கொள்கிறேன்" என தெரிவித்தார்.
வில் ஸ்மித்தின் செயலுக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் மற்றொரு தரப்பு மக்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், 1991-ம் ஆண்டு அர்செனியோ ஹால் என்ற நிகழ்ச்சியில் வழுக்கை தலைகொண்ட பேஸ் (Bass) என்ற இசைக்கருவி வாசிப்பாளரை, ஆஸ்கர் விழாவில் கிறிஸ் எப்படி ஜடாவை கிண்டல் செய்தாரோ அது போலவே வில் ஸ்மித்தும் கேலி செய்யும் வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
“He gotta wax his head every morning.” Now this is a video of Will Smith saying a joke about someone with Alopecia.
— Three Crosses (@Peter_OKH) March 28, 2022
One reason I love the internet, it never forgets. pic.twitter.com/4OGlgSrcjA
அந்த வீடியோவில், "பேஸ் பிளேயரா? அவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விதி உள்ளது. அவர் தினமும் காலையில் தனது தலையை ஷேவ் செய்ய வேண்டும். அது அவர் கடைப்பிடிக்கவேண்டிய ஒரு விதி! அவர் விதிகளைப் பின்பற்றுகிறார்," என்று வில் ஸ்மித் அலோபிஷியா நோயால் பாதித்த ஜான் பி வில்லியம்ஸ் என்ற பேஸ் பிளேயரை கிண்டல் செய்து சிரிக்கிறார்.
இதனை கேட்ட பார்வையாளர்கள் வில் ஸ்மித்தின் கருத்து முரட்டுத்தமாக உள்ளது என்று கூறுகின்றனர். இதற்கு பதிலளித்த வில் "இவையெல்லாம் நகைச்சுவை, கம் ஆன்" என்று கூறி முடிப்பதுபோல இருக்கும் இந்த வீடியோ தான் தற்போது இணையத்தை வட்டமடித்து வருகிறது.
இதற்கு பலரும் தன் வினை தன்னை சுடும் என்பது போல கம்மண்ட் அடித்து வருகிறார்கள்.