நீதிமன்ற தீர்ப்பு; சிக்கலில் சித்தராமையாவின் முதல்வர் பதவி? கர்நாடகாவில் பதற்றம்
முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மூடா முறைகேடு
மூடா(MUDA) எனப்படும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின்(Siddaramaiah) மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. சித்தராமையா பதவி விலக வேண்டுமென கர்நாடக பாஜக மைசூரை நோக்கி பேரணியை நடத்தியது.
ஆளுநர் அனுமதி
இந்த குற்றச்சாட்டை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்து வரும் நிலையில், முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் தவார் சந்த் கெலாட்( Thawar Chand Gehlotz) அனுமதி அளித்திருந்தார். ஆளுநரின் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, "ஆளுநரின் உத்தரவில் எந்த உள்நோக்கமும் இல்லை. புகார் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், முதல்வரின் நடவடிக்கையால் பலன் பெற்றவர்கள் வெளியாட்கள் அல்ல" என கூறி சித்தராமையாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சித்தராமையாவுக்கு சிக்கல்
ஏற்கனவே இந்த விஷயத்தில் சித்தராமையா முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்த பாஜக, தற்போது சித்தராமையா வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது உறுதியான நிலையில், பதவி விலக பெரிய அளவில் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் போதே தேர்தல் வெற்றி முக்கிய பங்காற்றிய டி.கே.சிவகுமார்(d.k.sivakumar)முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட இழுபறிக்கு பிறகு முன்னாள் முதல்வர் சித்தராமையா மீண்டும் முதல்வர் ஆனார்.
பிற மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடையே ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதோடு, கூண்டாக காங்கிரஸ் எம்.எல்.ஏ க்களை பாஜக இழுக்க முயலும் போது அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சியை பாதுகாப்பது டி.கே.சிவகுமார்தான். ஒருவேளை சித்தராமையா பதவி விலக நேர்ந்தால் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமாக உள்ள டி.கே.சிவகுமார் முதல்வராக தேர்வு செய்யப்படுவார்.