செந்தில் பாலாஜி அமைச்சராவதில் உள்ள சிக்கல்? சமாளிக்குமா தமிழக அரசு

M K Stalin V. Senthil Balaji DMK R. N. Ravi Supreme Court of India
By Karthikraja Sep 26, 2024 12:30 PM GMT
Report

செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்பதில் மற்றொரு சட்ட சிக்கல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜி

தமிழ்நாடு மின்சார துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 

senthil balaji

செந்தில் பாலாஜி சிறை சென்ற நிலையில், அவர் கவனித்து வந்த மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மது விலக்கு துறை முத்துசாமிக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது. இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்த செந்தில் பாலாஜி, கடந்த பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜாமீனில் விடுதலை

இன்று உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், 441 நாட்கள் கழித்து சிறையில் இருந்து வெளியாக உள்ளார். ரூ.25 லட்சத்துக்கு இருநபர் உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் தற்போது நீதிமன்றம் வந்துள்ளனர். 

senthil balaji release

இன்று மாலை அல்லது நாளை காலை அவர் வெளியாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முதலே செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறை முன் திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். 

வெளியே வரும் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டு அவர் கவனித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை மீண்டும் அவருக்கே ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி அமைச்சராவதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தலையீடு

ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சராவதில் மற்றொரு சிக்கல் உள்ளது. அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய தமிழக ஆளுநர் இதற்கு அனுமதிப்பாரா என தெரியவில்லை.

செந்தில் பாலாஜி வகித்து வந்த பதவிகளை மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கி விட்டு அவர் இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்த போது, குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் அமைச்சர் பதவி வகித்தால் அது நீதி விசாரணையை பாதிக்கும் என அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆ,ர்.என்.ரவி உத்தரவிட்டார். 

rn ravi senthil balaji

ஆளுநருக்கு அமைச்சரை நீக்க அதிகாரமில்லை இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழக அரசு. இந்த வழக்கில், 'ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பொன்முடி வழக்கு

இதே போல் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் அமைச்சர் பதவியை இழந்த பொன்முடி, சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் வெற்றிபெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல் முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடியை குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. இதனால், அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.

ஆளுநர் முட்டுக்கட்டை

அவரை மீண்டும் அமைச்சராக நியமிக்க, பதவி பிரமாணம் செய்து வைக்கக் கோரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர் என் ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு கடிதம் வாயிலாக பதிலளித்த ஆளுநர், பொன்முடிக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, ரத்து செய்யப்படவில்லை. பொன்முடி மீது ஊழல் கறை படிந்துள்ளதால் அவருக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என தெரிவித்தார். 

ponmudi rn ravi

இந்நிலையில் மீண்டும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றம் ஒரு தண்டனையை நிறுத்தி வைக்கும்போது, அது ஒரு தண்டனையை தடுக்கிறது என்பது ஆளுநருக்கு தெரியாதா? ஆளுநரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி, எங்களுக்கும் கவலை அளிக்கிறது.

உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

மனுதாரருக்கு மீண்டும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம், உச்ச நீதிமன்றத்தை அவர் அவமதித்துள்ளார். ஜனநாயக முறைப்படி மனுதாரருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். அதை ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும்.

முதல்வரின் தனிப்பட்ட அதிகாரத்தில் ஆளுநர் எப்படி தலையிட முடியும். அவருக்கு சட்டம் தெரியுமா, தெரியாதா. அவருக்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தகுந்த அறிவுரை கூற வேண்டும். இல்லாவிட்டால், கடுமையான கருத்துகளை பதிவு செய்ய நேரிடும். குறிப்பாக உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம் என கடுமையான அறிவுறைகளை வழங்கியது.

மீண்டும் அமைச்சர் பதவி

இதனையடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது, மாநில பாடத்திட்டங்களை விமர்சிப்பது என பல்வேறு விஷயங்களில் தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜி பதவியேற்பிற்கும் முட்டுக்கட்டை போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

udhayanidhi stalin senthil balaji

ஜாமீன் மனுவில் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சர் இல்லையென்றும் எனவே வழக்கு விசாரணையில் எந்த தாக்கமும் இருக்காது என செந்தில் பாலாஜி தரப்பு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி அமைச்சரானால் இந்த வழக்கு விசாரணையில் அதிகாரத்தை செலுத்துவார் என கூறி ஆளுநர் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளது. 

அமைச்சரவை மாற்றத்தோடு உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்கும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் உள்ள நிலையில், ஆளுநர் ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தினால் உச்ச நீதிமன்றம் சென்று சட்ட போராட்டம் நடத்த தமிழக அரசு தயாராக உள்ளது.